துர்க்கையின் பெயரை என்றன்நா
சொல்லிய வண்ணம் இருக்கட்டும்!
துர்க்கையைத் தவிரத் துன்பத்தில்
துணைக்கெவர் வந்து காத்திடுவார்?
பிறவிக் கடலைக் கடக்க அவள்
பெயரே படகாய் இருக்கிறது.
சிரத்தைக் குளத்தில் அப்படகு
செம்மை யாக மிதக்கிறது!
செல்வம் உனக்குக் கருணையுடன்
ஸ்ரீகுரு வானவர் அளித்திட்டால்
நல்வித மாகச் சாதனைகள்
நாளும் புரிந்தக் கரை சேர்வாய்!
(துர்க்கையின்)
ஆறு விரோதிகள் அப்படகை
அக்கரை செல்ல ஒட்டாமல்
மாறிக் காற்றாய்ச் சாடுகையில்
வருவாள் துர்க்கை துணையாக!
அன்னை துர்க்கைத் திருநாமம்
அக்கரை செல்லும் படகாக
முன்வந் துதவி செய்யுங் கால்
மோதும் புயல்தான் என்செய்யும்?
(துர்க்கையின்)
நீயே அந்த வானுலகம்!
நீயே இந்தப் பூவுலகம்!
தாயே நீதான் பாதாளம்!
சகல உலகும் நீதானே!
உன்னிடமிருந்தே ஹரியவனும்
உலகம் படைக்கும் பிரம்மாவும்
பன்னிரு நற்கோ பாலர்களும்
பாங்குடன் வந்து தோன்றிட்டார்!
(துர்க்கையின்)
பத்தெனும் வித்தைகள் நீயன்றோ?
பத்தவ தாரமும் நீயன்றோ?
இத்தரு ணத்திலே எப்படியும்
எனைநீ கரையேற் றிடவேண்டும்!
நேரில் அறியாச் சூக்குமம் நீ!
நிஜமாய் ஸ்தூல பொருளும் நீ!
பாரில் அசைவன யாவும் நீ!
பகரும் அசையா பொருளும் நீ!
(துர்க்கையின்)
ஆக்கல் அளித்தல் அழித்தலெனும்!
அனைத்தும் அன்னை நீதானே!
காக்கும் தாயே நீயன்றோ
காசினிக் கெல்லாம் ஆதாரம்!
உலகம் மூன்றும் படைத்தவள் நீ!
ஓங்கும் திறனால் கடந்தவள் நீ!
நிலவும் அனைத்தும் இயக்கமுற
நீயே சக்தி என் தாயே!
–‘அமுத மொழிகள்’