ஓம் சக்தி ஓம் சக்தி

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம்

கணபதிராயன் அவனிரு

காலைப் பிடித் திடுவோம்

குணமுயர்ந்திடவே விடுதலை

கூடி மகிழ்ந்திடவே (ஓம்)

சொல்லுக் கடங்காவே பராசக்தி

சூரத்தனங்களெல்லாம்

வல்லமை தந்திடுவாள் பராசக்தி

வாழி என்றே துதிப்போம் (ஓம்)

வெற்றி வடிவேலன் அவனுடை

வீரத்தினைப் புகழ்வோம்

சுற்றி நில்லாதே போ பகையே

துள்ளி வருகுது வேல் (ஓம்)

தாமரைப் பூவினிலே சுருதியைத்

தனியிருந்துரைப்பாள்

பூமணித் தாளினையே கண்ணிலொற்றி

புண்ணிய மெய்திடுவோம் (ஓம்)

பாம்புத் தலைமேலே நடஞ்செய்யும்

பாதத்தினைப் புகழ்வோம்

மாம்பழ வாயினிலே குழலிசை

வண்மை புகழ்ந்திடுவோம் (ஓம்)

செல்வத் திருமகளைத் திடங்கொண்டு

சிந்தனை செய்திடுவோம்

செல்வமெல்லாம் தருவாள் நமதொளி

திக்கனைத்தும் பரவும் (ஓம்)

–பாரதியார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top