மறுபடியும் மறுபடியும்

மறுபடியும் மறுபடியும்

மனமேநீ துர்க்கையெனும்
அருமைமிகு தாயவளின்
அழகுப் பெயரைப் பாடு!

துர்க்கையவள் திருநாமம்
சொல்லிவழி நடப்பவரை
நற்சிவன்தன் சூலத்தால்
நயந்தருளிக் காத்திடுவான்!

எந்தன் தாய் நீயே எழில்மிகு பகலானாய்! அந்திப் பொழுதானாய் அருமை இரவானாய்!

(மறுபடியும்)

சிலசமயம் ஆணாவாய்
சிலசமயம் பெண்ணாவாய்
நலமுடைய நீ என்பால்
நகர்ந்தெங்கோ சென்றுவிடு
என்று புகன்றாலும் எங்கும் நான் போகாமல் உன்றன் திருப்பாதம் உறுதியுடன் பற்றிடுவேன்!

(மறுபடியும்)

கலகலென ஒலிஎழுப்பும்
காற்சலங்கை போலஉன்றன்
மலரடிகள் இரண்டினையும்
மாறாது பற்றிடுவேன்!

வானில்நீ பருந்தாக சிறகடித்து வந்தால் மீனாகித் தண்ணீருள் மிதந்து திரிந்திடுவேன்

(மறுபடியும்)

பாய்ந்தென்னை உன்நகத்தால் பற்றிப்பிடித்திடுவாய்!
தாயுன்றன் பிடியாலே
தமியேன் உயிர் பிரிந்தால்
உனக்கொருநல் விண்ணப்பம்
உன்கமலத் திருவடியில்
இனிய புகலிடத்தை எனக்களிக்க மறுக்காதே!

– அமுதமொழிகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top