பட்டம் பறக்க விடுகின்றாய்
பவ சம்சாரச் சந்தையிலே;
திட்டம் தீட்டி அற்புதமாய்த்
தேவீ, லீலை புரிகின்றாய்!
நரம்பும் எலும்பும் கூடாக்கி
நயமாய் மாயை நூல்கோத்து,
விரும்பும் ஆசைக் காற்றினிலே
விடுவாய் பட்டம் பலகோடி!
சாந்தம், வீரம், சோம்பலென
சாற்றும் குணங்கள் மூன்றினையும்
ஏந்தி இணைப்பாய், பகட்டாக
இழைப்பாய், பட்டம் எழிலுறவே!
மையல் என்னும் மாஞ்சாவை
வழித்துப் பூசி முறுக்கேற்றி
கையில் பிடித்த காற்றாடிக்
கயிற்றில் கடுமை சேர்க்கின்றாய்!
விண்ணில் மிதக்கும் பட்டத்தில்
ஒன்றோ இரண்டோ விடுபட்டால்
கண்ணிற் கண்டு கைகொட்டி
காளி நீயும் சிரிக்கின்றாய்!
அறுந்து செல்லும் காற்றாடி
அன்புத் தென்றல் மீதூர்ந்து
பிறந்தபிறவிக் கடல்தாண்டிப்
பேரானந்த நிலைபெறுமே!
–‘அமுத மொழிகள்’