வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆள் என்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத்து ஒலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
பிச்சாடல் பேயோடு உகந்தாய் போற்றி
பிறவி அறுக்கும் பிரானே போற்றி
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
மருவி யென்சிந்தை புகுந்தாய் போற்றி
பொய்ச்சார் புரமூன்றும் எய்தாய் போற்றி
போகாது என்சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சாக நாகம் அசைந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி