மலரின் மேவு திருவே – உன்மேல்
மையல் பொங்கி நின்றேன்
நிலவு செய்யும் முகமும் – காண்பார்
நினை வழிக்கும் விழியும்
கலகலென்ற மொழியும் – தெய்வ
களி துலங்கு நகையும்
இலகு செல்வ வடிவும் கண்டுன்
இன்பம் வேண்டுகின்றேன்
கமலமேவும் திருவே நின்மேல்
காதலாகி நின்றேன்
குமரி நின்னை இங்கே பெற்றோர்
கோடி இன்பமுற்றார்
அமரர் போல வாழ்வேன் – என்மேல்
அன்பு கொள்வையாயின்
இமய வெற்பின் மோத – நின்மேல்
இசைகள் பாடி வாழ்வேன்
–பாரதியார்