யாதும் ஆகி நின்றாய் காளி
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை யெல்லாம் நின்றன்
செயல்கள் அன்றி இல்லை!
போதும் இங்கு மாந்தர் வாழும்
பொய்மை வாழ்க்கை யெல்லாம்
ஆதிசக்தி தாயே என் மீது
அருள் புரிந்து காப்பாய்!
எந்த நாளும் நின்மேல் தாயே
இசைகள் பாடி வாழ்வேன்
கந்தனைப் பயந்தாய் தாயே
கருணை வெள்ளம் ஆனாய்!
மந்த மாருதத்தில் வானில்
மலையின் உச்சி மீதில்
சிந்தை எங்கு செல்லும் அங்கு உன்
செம்மை தோன்றும் அன்றே!
–பாரதியார்