சொல்லுவம் வைஷ்ணவன் யாரெனக் கேளீர்
சோர்ந்தவர் பீடையை அறிவானே
எல்லோர்தம் துக்கத்தை எரிப்பவனாயினும்
எள்ளளவும் கர்வம் அடையானே
மன்னுயிர் மக்களை வந்தித்து நிற்பான்
மாசுறு நிந்தனை மொழியானே
சொல்மனம் உடல் அதில் சுத்தம தானவன்
சோதியுற்றாள் பெற்ற தாய்மாரே
பாவப் பேராசை யற்றுப் பார்வை சமத்வமுற்று
பரஸ்திரீயைத் தாயெனப் பணிவானே
நாவினால் பொய்மொழி நவிலமும் மாட்டான்
நாளும் பிறர்செல்வம் தீண்டானே
மாயையும் மோகமும் மாயும் அவன்பால்
மனதில் வைராக்கியம் உறுவானே
ஓயாமல் ராமனை உள்ளம் நினைந்திட
உண்டு புண்ணியம் புனல் உடலதிலே
காமமும் லோபமும் கபடமும் கோபமும்
கனவிலு மில்லாத கனவானே
பாமரர் பார்த்திடப் பற்பல தலைமுறை
புண்ணியம் அடைந்திடச் செய்வானே