மோகத்தைக் கொன்றுவிடு

மோகத்தைக் கொன்றுவிடு அல்லால்

எந்தன் மூச்சை நிறுத்திவிடு

தேகத்தை சாய்த்துவிடு அல்லால்

அதில் சிந்தனை மாய்த்துவிடு

யோகத்திருத்தி விடு அல்லால்

எந்தன் ஊனைச் சிதைத்துவிடு

ஏகத்திருந்துலகம் இங்குள்ள
யாவையும் செய்பவளே

பந்தத்தை நீக்கிவிடு அல்லால்

உயிர்ப் பாரத்தைப் போக்கிவிடு

சிந்தை தெளிவாக்கு அல்லால்

இதைச் செத்த உடலாக்கு

இந்தப் பதர்களையே நெல்லாம்

என எண்ணி இருப்பேனோ

எந்தப் பொருளிலுமே உள்ளே

நின்று இயங்கி இருப்பவளே

உள்ளம் குளிராதோ பொய்

ஆணவ ஊனம் ஒளியாதோ

கள்ளம் உருகாதோ அம்மா

பக்திக் கண்ணீர் பெருகாதோ

வெள்ளக் கருணையிலே இந்நாய்

சிறு வேட்கை தவிராதோ

விள்ளற்கரியவளே அனைத்திலும்

மேவி இருப்பவளே 

–பாரதியார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top