குருவே பரமன்

குருவே! பரமன் கொழுந்தே பணிந்தேன்

குவலயம் போற்றும் கணநாதா!

வருவாய் நினைவில் வந்தெனை ஆள்வாய்

வடிவேலவனின் சோதரனே!

அருள்வாய்! உனையே அனுதினம் பணிவேன்

அன்னை பராசக்தி அருள் மகனே!

திருமால் மருகா! திருவடி சரணம்!

தீன ரக்ஷகனே! கணநாதா!

வானொடு நீரும் வளியும் தீயும்

வையகம் யாவும் உன் வடிவே!

மானிட வாழ்வை மகிழ்வுறச் செய்வாய்

மங்கலப் பொருளே கணநாதா!

தேனோடு பாலும் தெங்கொடு பழமும்

தெவிட்டா அமுதமும் தினம் படைப்பேன்!

ஊனொடு உயிரும் உணர்வும் புரப்பாய்!

உன்னடி தொழுதேன்! கணநாதா!

சங்கரன் மகனே! சஞ்சலம் தீர்ப்பாய்

சக்தி குமாரா! கணநாதா!

ஐங்கரனே! உன் அடியினை தொழுவேன்

அடைக்கலம் நீயே கணநாதா!

சம்ஹரித்திடுவாய் சங்கடமெல்லாம்

சம்பு குமாரா! கணநாதா!

சங்கரி மைந்தா! சந்ததம் பணிவேன்

சரணம்! சரணம்! கணநாதா!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top