ஹரிபஜனம் ஹரிபஜனம் ஹரிபஜனம் ஒன்றே
கலியுகத்தில் ஓளஷதமாய் கருணை செய்யும்
இன்றே.
பக்தரெல்லாம் பரவசமாய் பாடுகின்ற நாமம்
சித்தசுத்தி தந்தருளும் தெய்வமணி நாமம்.
உடல் முழுதும் இன்பரசம் ஊட்டுகின்ற நாமம்
இடையறாமல் என்னுள்ளத்தே இலங்குகின்ற
நாமம்.
கமலமுகம் கருணைவிழி காட்டுகின்ற நாமம்
எமபயத்தை நீக்கவல்ல எம்பெருமான் நாமம்
பாற்கடலில் பாம்பணைமேல்
பள்ளிகொண்ட நாமம்
ஆச்சரிய மாயையெல்லாம்
அகற்றுகின்ற நாமம்.
ஆதிசேஷ சயன நாமம் ஆதியான நாமம்.
ஜோதியான நாமமிதே சுந்தரமாம் நாமம்.
மாமுனிவர் காதலிலே வளர்ந்த ஹரி நாமம்
பூமகளின் திருவுளத்தே பொங்கிவரும் நாமம்.
நீலமேக வடிவழகை நித்தியமும் காண்போம்
நேரமெல்லாம் பாடியாடி
நிர்ப்பயமாய் வாழ்வோம்
ஹரிபஜனம் ஹரிபஜனம்
ஹரிபஜனம் செய்வோம்
இடைவிடாமல் எண்ணி எண்ணி
இப்பொழுதே உய்வோம்