அன்னையே நானென்ன எட்டே மாதத்தில்
பிறந்த சிறு குழந்தையா?
என்னை உன் செங்கண்ணால் அச்சுறுத்தினால்
அஞ்சியே நிற்க மாட்டேன்!
உன் அரும் சிவன்மார்பில் தாங்கும் உன் பூம்பாதம்
உயர்வான எனது செல்வம்!
உரிமைநான் கேட்கையில் தருவதற்கென்னவோ
தாமதம் செய்கின்றாய். (அன்னையே)
என்னுடை நெஞ்சினில் உன்பதி சிவனதைப்
பரிசெனத் தந்ததற்கே
எழுதிக் கொடுத்தவோர் சாசனம்தன்னையே
பாதுகாத்துள்ளேன் நான்! (அன்னையே)
இனி நான் உன்றன்மேல் வழக்கினை மன்றிலே
எளிதினில் தொடுத்திடுவேன்!
எடுத்துநான் கூறுமோர் குறிப்பினால் மட்டுமே
வழக்கினை வென்றிடுவேன்! (அன்னையே)
நடனமிடும் சிவன் தந்தநல் மந்திரச்
செல்வத்தை அந்தவேளை
தாயுனது முன்பாகப் பாரெனக் காட்டியே
தனயன் நான் நின்றிடுவேன் (அன்னையே)
அதிகமாம் கடுமையோடு எதிர்த்திடும் வழக்கொரு
தாயிற்கும் சேயிற்குமே!
‘அடடா இதென்ன விளையாட்டோ’ என
ராமபிரசாத் சொல்கின்றான். (அன்னையே)
கதியென நீ வந்து வழக்கை நிறுத்தி எனை
ஆட்கொள்ளும் காலம் வரையில்
நிச்சயமாகவே வேதனை தந்திடும்
காரியம் கைவிடேன் (அன்னையே)