கனக சபாபதி தரிசனம் ஒருநாள்
கண்டால் கலி தீரும் (கனக)
ஸனக மகாமுனி கைதொழு தேத்திய
தினகர கோடி தேஜோமய மாகிய (கனக)
மனதிலொடுங்கிய கல்மஷம் போக்கும்
மாயப் பிணியதனை மறுவடி வாக்கும்
ஜனன மரண ஸம்ஸாரத்தை நீக்கும்
திருவடி நிழலிலே கூடிய யார்க்கும் (கனக)
சுருதி முடிகளிலும் சொல்லிக்கொண்டாடும்
தூயவெளியை யொளி யாகவே கூடும்
தரும நெறியுந் தவ றாதுளம் நாடும்
ததிங்கிண தோமென்று தாண்டவமாடும் (,,)
பற்பல யோசனை செய்வதுந் தொல்லை
பரகதியடைய வுபாயமு மில்லை
அற்புதமாகவே தானொரு சொல்லை
அணியுங் கோபாலகிருஷ்ணன் பணி யுந்தில்லை